Tuesday 17 September 2013

குதம்பைச் சித்தர் திருமூலர் மெய்ஞானம்




ஆசை விடவிட ஆனந்த மாகும்.
குதம்பைச் சித்தர் திருமூலர் மெய்ஞானம்
நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது. அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம்.  தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது. இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.  

இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது. இது அளவு மீறி  தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர். பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.

தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது. அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும். யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.

இதைத்தான்  குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.

பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி
பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது  என்கிறார் குதம்பைச் சித்தர்.தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர்

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.... எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி  வாழ்வோம். 

அகத்தியர் அருளியது



நந்தி தேவரை தரிசிக்கும் முறை
சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப் படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும்  பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த நந்தி தேவரை அகத்தில் தரிசிக்கும் ஒரு முறையினையே இன்று பார்க்க இருக்கிறோம். நம்புவதற்கு சற்று சிரமமான தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய அளவில் எனக்கு கிடைத்த ஒரு தகவலை இங்கே பகிர்கிறேன்.

அகத்தியர் அருளிய "அகத்திய பூரண சூத்திரம்" என்னும் நூலில்தான் நந்திதேவரை தரிக்கும் முறை கூறப் பட்டிருக்கிறது. அந்த பாடல் பின்வருமாறு....

பார்க்கையிலே பரமகுரு தியனாங்கேளு
பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புத்தியாக
ஏர்க்கையுட னுதையாதி காலந்தன்னில்
இன்பமுடன் சரீரமதைச் சுத்திசெய்து
மார்க்கமுடன் பூதியுத் வளமாய்ப்பூசி
மைந்தனே சுகாசனமா யிருந்துகொண்டு
தீர்க்கமுடன் புருவநடுக் கமலமீதில்
சிவசிவா மனதுபூ ரணமாய்நில்லே.

அகத்தியர்

நில்லாந்த நிலைதனிலே நின்றுமைந்தா
நிஸ்பயமாய் லிங்கிலிசிம் மென்றுஓது
சொல்லந்த மானகுரு நாதன்றானும்
சுடரொளிபோ லிருதயத்தில் தோன்றும்பாரு
நல்லதொரு நாதாந்தச் சுடரைக்கண்டா
நந்தியென்ற சோதிவெகு சோதியாச்சு
சொல்லந்தச் சோதிதனைக் கண்டால்மைந்தா
தீர்க்கமுட னட்டசித்துஞ் சித்தியாமே.

அகத்தியர்
சூரிய உதய நேரத்தில் உடல் தூய்மை செய்து,  திருநீறு அணிந்து சுகாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். உடலையும் மனதையும் தளர்த்திய பின்னர் கண்களை மூடி புருவ மத்தியில் மனதினை ஒருமைப் படுத்தி, தியான நிலையில் இருந்து "லிங் கிலி சிம்" என்கிற மந்திரத்தினை தொடர்ந்து செபிக்க வேண்டுமாம். 

இவ்வாறு தினசரி செபித்து வந்தால் பரமகுருவான நந்திதேவர் நம் இதயத்தில் சோதிவடிவாகக் காட்சி கொடுப்பார் என்றும், அவர் தரிசனத்தினைக் கண்டால் அட்ட  சித்துக்களும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்

ஆச்சர்யமான தகவல்தானே!

Monday 16 September 2013

திருமுறைகளின் மகிமை

திருமுறைகளின் மகிமை

புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே;
          புத்த னார்தலை தத்தெனத் தத்துமே;
கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
          கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே;
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
          பழைய என்புபொற் பாவைய தாக்குமே;
சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
          செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.

தலைகொள் நஞ்சமு தாக விளையுமே;
          தழல்கொள் நீறு தடாகம தாகுமே;
கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே;
          கோள ராவின் கொடுவிடம் தீருமே;
கலைகொள் வேத வனப்பதி தன்னிலே;
          கதவு தானும் கடுகத் திறக்குமே;
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே;
          அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே.

வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே;
          வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே;
மங்கை பாகனைத் தூது நடத்துமே;
          மருவி யாறு வழிவிட்டு நிற்குமே;
செங்க லாவது தங்கம தாக்குமே;
          திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே;
துங்க வான்பரி சேரற்கு நல்குமே;
          துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே.

பெருகும் வைகை தனையடைப் பிக்குமே;
          பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே;
நரியெ லாம்பரி யாக நடத்துமே;
          நாடி மூகை தனைப்பேசு விக்குமே;
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே;
          பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே;
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே;
          வாத வூரர் வழங்கிய பாடலே.


Wednesday 11 September 2013

18 - சித்தர்களின் மூல மந்திரம்



18 - சித்தர்களின் மூல மந்திரம் ...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"


தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...


"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

Tuesday 10 September 2013

18 - பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்,18 Siddhar List



18 - பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்,18 Siddhar List

பெயர் - நந்தி தேவர்
குரு - சிவன்
சீடர்கள் - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி
சமாதி - காசி (பனாரஸ்)

பெயர் - அகஸ்தியர்
குரு - சிவன்
சீடர்கள் - போகர், மச்சமுனி
சமாதி - அனந்தசயனம் (திருவனந்தபுரம்)

பெயர் - திருமூலர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு
குரு - நந்தி
சமாதி - சிதம்பரம்

பெயர் - போகர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17
குரு - அகஸ்தியர், காளங்கி நாதர்
சீடர்கள் - கொங்கனவர், கருவூரார், இடைக்காடர்
சமாதி - பழனி

பெயர் - கொங்கனவர்
உத்தேச காலம் - கி.பி. 14ம் நூற்றாண்டு
குரு - போகர்
சமாதி - திருப்பதி

பெயர் - மச்சமுனி
குரு - அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர்
சீடர்கள் - கோரக்கர்
சமாதி - திருப்பரங்குன்றம்

பெயர் - கோரக்கர்
குரு - தத்தாத்ரேயர், மச்சமுனி
சீடர்கள் - நாகார்ஜுனர்
சமாதி - போயூர் (கிர்னார், குஜராத்)

பெயர் - சட்டமுனி
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - நந்தி, தக்ஷிணாமூர்த்தி
சீடர்கள் - சுந்தரானந்தர்
சமாதி - ஸ்ரீரங்கம்

பெயர் - சுந்தரானந்தர்
குரு - சட்டமுனி, கொங்கனவர்
சமாதி - கூடல் (மதுரை)

பெயர் - ராம தேவர்
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - புலஸ்தியர், கருவூரார்
சமாதி - அழகர் மலை

பெயர் - குதம்பை
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - இடைக்காடர், அழுக்காணி சித்தர்
சமாதி - மாயவரம்

பெயர் - கருவூரார்
குரு - போகர்
சீடர்கள் - இடைக்காடர்
சமாதி - கருவை (கரூர்)

பெயர் - இடைக்காடர்
குரு - போகர், கருவூரார்
சீடர்கள் - குதம்பை, அழுக்காணி சித்தர்
சமாதி - திருவண்ணாமலை

பெயர் - கமலமுனி
சமாதி - திருவாரூர்

பெயர் - பதஞ்சலி
குரு - நந்தி
சமாதி - ராமேஸ்வரம்

பெயர் - தன்வந்தரி
சமாதி - வைத்தீஸ்வரன் கோவில்

பெயர் - பாம்பாட்டி
குரு - சட்டமுனி
சமாதி - சங்கரன் கோவில்

பெயர் - வால்மீகி
குரு - நாரதர்
சமாதி - எட்டிக்குடி


இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது. பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம். 

பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன. 

உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.