Saturday 13 September 2014

அரிச்சந்திரன் அரசகட்டளையை நிறைவேற்றுதல்



Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931
சந்திரமதி பலகொடுமைகளுக்கு ஆளாகுதல்
வீரவாகுவால் வாங்கப்பட்ட அரிச்சந்திரன் தன் எஜமானனிடம் அனைத்து அடிமை வேலைகளையும் செய்யலானார். இப்படி மயானத்திலே காவல் தொழில் புரிந்து அரிச்சந்திரன் வாழ்ந்துகொண்டு வரும் பொழுது; காலகண்ட அய்யரால் அரிச்சந்திரனிடமிருந்து வாங்கப்பட்ட சந்திரமதியும் லோகிதாசனும் பல துன்பங்களை அனுபவித்தனர். காலகண்ட அய்யரும் அவர் மனைவி காலகண்டியும் பலவிதமான அடிமைவேலைகளை சந்திரமதியினிடத்திலும் லோகிதாசனிடத்திலும் வாங்கிக்கொண்டு வாழலாயினர். அரிசிக்குத்துதல், சாணம் தட்டுதல், எஜமானனுக்கும் எஜமானிக்கும் கால்பிடித்து விடுதல் போன்ற எண்ணற்ற அடிமை வேலைகளைச்செய்யலாயினர்.

லோகிதாசன் பாம்பு கடித்து இறத்தல்
இவ்வாறிருக்கையில் ஒருநாள் அமாவாசை திதி நெருங்கிவிட்டபடியினால் அந்தணர்கள் வீட்டில் அதற்குண்டான தர்பைப்புல் தேவைப்படுவதால் தர்ப்பையைக்கொய்து வர லோகிதாசனை தன்வீதியில் வாழும் பிற அந்தணர்பிள்ளைகளுடன் காலகண்ட அய்யரும் அவரது மனைவியும் அனுப்பி வைத்தனர். சிறுகுழந்தையான லோகிதாசன் காட்டிற்குச்சென்று தர்ப்பையைக்கொய்யும் போது நல்லப்பாம்பு கடித்துவிடுகிறது. அய்யோ! அம்மா! அப்பா! என்று கதரிய லோகிதாசனைக்காண பிற அந்தணப்பிள்ளைகளெல்லாம் அங்கு வந்தனர். லோகிதாசன் அவர்களிடத்திலே இங்கு நடந்த விவரங்களை தன் தாயினிடம் சொல்லிவிடுமாறும் தான் இனி பிழைக்கமாட்டேன் என்றும் சொல்விட்டு உயிர் துறந்தான். லோகிதாசனின் சடலத்தை ஒரு ஆலமரத்தின் அடியில் கிடத்தி விட்டு ஆவாரைத்தழைகள் பலவற்றை பொறுக்கி வழிதோறும் அவைகளைப்போட்டுக்கோண்டே அந்தணப்பிள்ளைகளெல்லாம் காலகண்ட அய்யரின் வீட்டை அடைந்து லோகிதாசனின் மரணச்செய்தியை சொன்னனர். லோகிதாசனின்  சடலம் இருக்குமிடத்தையும் அவ்விடத்தை கண்டுபிடிக்க ஆவாரம் தழைகளை அடையாளத்திற்காக வழிநெடுகிலும் போட்டு விட்டு வந்துள்ளதையும் தெரிவித்துவிட்டு இரவு நேரமாகையினால் அனைத்து அந்தணப்பிள்ளைகளும் அவரவர் வீடுதிரும்பினர்.

லோகிதாசனின் மரணச்செய்தியைக்கேட்டு சந்திரமதி புலம்பல்
தன்மகனின் மரணச்செய்தியைக்கேட்ட சந்திரமதி மயக்கமுற்று கதறி அழுதாள். சூரியகுலத்தின் ஒரே வாரிசான நீ இறந்துவிட்டாயா மகனே! உன் தந்தை என்னை மீட்டுக்கொள்வதற்காக மீண்டும் ஒருநாள்  வந்து கேட்டால் நான் அவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறேனடா மகனே! உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்!  நீ பிறந்த நாளிலே உன் தந்தை பெருமகிழ்ச்சியடைந்து அயோத்தி மாநகர் முழுமைக்கும் இலவச உணவு, உடை, கோதானம் போன்ற பலகோடி தானங்களை உன் தந்தையார் நாட்டுமக்களுக்காக செய்தாரடா என் மகனே! உன் தந்தை செய்த பலகோடி தானதர்ம புண்ணியங்கள் கூட உன் மரணத்தைத்தடுக்கவில்லையா மகனே? அந்த தர்மதேவதை உன் மரணகாலத்தில் தூங்கிவிட்டாளா மகனே? என்று பல்வாறாக புலம்பி அழுதுகொண்டு தன் எஜமானரிடத்திலே மன்றாடி அனுமதி பெற்று ஆவாரத்தழைகளை பார்த்துக்கொண்டே தன் மகனின் சடலம் வைக்கப்பட்டிருக்கும் ஆலமரத்தடியை அடைந்தாள் சந்திரமதி. தன் மகனின் சடலத்தைக்கண்டு தன்மகன் லோகிதாசனின் பாட்டனாரான திரிசங்கு சக்கரவர்த்தியின் புகழையும் அதற்கு முன் அயோத்தியை ஆண்ட அவரின் மூதாதையர்களான சூரியகுலத்தின் பேரரசர்களின் தர்மவாழ்வையும் நினைவு கூர்ந்து அப்படிப்பட்ட உயர்ந்த குலத்தில் பிறந்த  உனக்கா இந்த கதி? இந்த உலகைக்காக்கும் இறைவன் பரமேஸ்வரனும் செத்துவிட்டானோ? இந்த பூமியில் நீதி மரணமடைந்துவிட்டதோ? என்றெல்லாம் புலம்பியபடி கதறி அழுதாள்.

சந்திரமதி லோகிதாசனின் சிதைக்குத்தீமூட்டல்
பலமணிநேரம் அழுத பிறகு தன்னைத்தானே தேர்த்திக்கொண்டு இரவு முடிவதற்குள் தன் எஜமானரின் வீட்டுக்குத்திரும்பி பணிவிடைகளைச்செய்யவேண்டுமாதலால் தன்மகனின் சடலத்தை எரிப்பதற்காக தன் மகனை சுமந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் காசிமாநகரின் சுடுகாட்டை அடைந்து சுடு காட்டில் தன் மகனின் சடலத்தைக்கிடத்தினாள். காட்டிலுள்ள விரகுகளையெல்லாம் பொறுக்கிக்கொண்டு வந்து தன்மகனின் சடலத்தின் மீது முறையாக அடுக்கினாள்.  பிறகு தன் குலகுருவாகிய வசிட்டரையும் தன் குலத்தின் மூலகுருவாகிய சம்புகமுனிவரையும் நினைத்து தன்மகனின் சிதைக்குத்தீமூட்டினாள்.
                                                             
மயானக்காவலர் ஆட்சேபம் தெரிவித்தல்
அப்பொழுது அந்த சுடுகாட்டை காவல் புரிந்து வரும் வீரவாகுத்தோட்டியின் அடிமையான அரிச்சந்திரன் அங்கே வந்து தீயை அணைத்து சடலத்தை எரிப்பதை நிறுத்தினான். காலங்கள் பல கடந்தமையாலும் தானும் தன் மனைவியும் அடிமை வேலை செய்து வருவதாலும் இருவரின் உருவங்களும் மாற்றம் பெற்றபடியினாலும், அதுமட்டுமல்லாமல் நள்ளிரவு காலமானதாலும் ஒருவரையொருவர் அடையாளம் காணமுடியவில்லை.

அரிச்சந்திரன் சந்திரமதியைப்பார்த்து அடிப்பெண்ணே! நீ இந்த நள்ளிரவிலே இந்த சுடுகாட்டின் காவலாளியான எனக்குத்தெரியாமல் எப்படி பிணத்தைச்சுடலாம்? என்று கேள்விகள் பல கேட்டு பிணம் சுடுவதை நிறுத்தினான். அரிச்சந்திரன் தன்னெதிரே நின்ற பெண்ணைப்பார்த்து மயானக்காவலராக விளங்கக்கூடிய எனக்குச்சேரவேண்டிய மயானக்கட்டளைகளாகிய கால்பணம்,  முழம்துண்டு, வாய்க்கரிசி போன்றவைகளைக்கொடுத்தால் மட்டுமே பிணத்தை சுடமுடியும் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட சந்திரமதி மயானக்காவலராகிய அரிச்சந்திரனிடத்திலே அய்யா! எனக்கு திக்கு இல்லை எனவே, என்னால் நீங்கள் சொல்லும் கட்டளையை செலுத்தமுடியாது என்று சென்னாள். இதைக்கேட்ட மயானக்காவலரான அரிச்சந்திரன் அப்படியானால் உமக்கு கணவனில்லையா? என்று கேட்டார். இதைக்கேட்டு மனம் நொந்த சந்திரமதி மயானக்காவலரை நோக்கி அய்யா! எனக்கு கணவருண்டு ஆனால் அவருடைய அரவணைப்பில் நான் இப்பொழுது இல்லை எனவே, என்னால் தாங்கள் கேட்கும் கட்டளையை கொடுக்க இயலாது எனவே, தயவு செய்து என்மகனின் பிணத்தை எரிக்க அனுமதியுங்கள் என்று வேண்டிக்கேட்டாள். எதிரே நின்ற பெண்ணைக்கண்ட அரிச்சந்திரன் அடிப்பெண்ணே! உன் கழுத்தில் அழகாக ஒளிர்கின்றதே விலைமதிக்க முடியாத தாலி அதை விற்று எனக்குச்சேரவேண்டிய கட்டளையைக்கொடுத்துவிட்டு உன் மகனின் சடலத்தை எரித்துக்கொள் என்று சொன்னார்.  மயானக்காவலரின் வார்த்தையைக்கேட்ட சந்திரமதி மிகவும் மனம் கலங்கினாள். தேவர்கள், மூவர்கள் முதலான ஈரேழு பதினான்கு லோகங்களில் வாழும் யார் கண்ணுக்கும் தெரியமுடியாத என் கணவரின் கண்ணுக்கு மட்டுமே தெரியக்கூடிய எனது கற்பின் சின்னமாக விளங்கக்கூடிய மாங்கல்யம் ஒரு மயானக்காவலாளியின் கண்ணுக்குத்தெரிந்துவிட்டதே! இந்த துன்பத்தை நான் எப்படி தாங்கிக்கொள்வேன்? என்று கதரி புலம்பி மண்ணிலே வீழ்ந்தாள் சந்திரமதி.

இதைக்கண்ட அரிச்சந்திரன், தான்தான் வாழ்வில் பெருந்துயரத்தை அனுபவித்து வருபவன் என்று நினைத்தால் இந்தப்பெண் என்னைவிட பெருந்துயரத்தை அனுபவிப்பவள் போலல்லவா தெரிகின்றது என்று நினைத்துக்கொண்டு தன்னை இகழ்ந்து பேசியதையும் பொருட்படுத்தாமல் அந்த பெண்ணின் மீது நீர் தெளித்து மயக்கம் தெளிவித்தார். சந்திரமதியின் வார்த்தைகளைக்கேட்ட அரிச்சந்திரன் ஒரு கணம் சிந்தித்தார், தன் எதிர் முன் நின்றகின்ற பெண் ஒருவேளை தன்னுடைய மனைவி சந்திரமதியாக இருக்குமோ! அவளுக்குத்தானே அத்தகைய சிறப்பு உண்டு எனவே, அவளின் முழுவரலாற்றைக் கேட்டுவிடலாம் என்று நினைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

சந்திரமதி  தன் வரலாற்றைக்கூறுதல்
அம்மா! தாங்கள் யார்? எந்த ஊர்? உங்கள் மகன் எப்படி இறந்தான்? விவரமாக எனக்குச்சொல்லுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.  சந்திரமதி மயானக்காவலர் அரிச்சந்திரனைப்பார்த்து தன்னைப்பற்றிய விவரங்களைச்சொல்ல ஆரம்பித்தார். கண்ணமாபுரியை ஆளக்கூடிய மதிதேய மன்னரின் பெருந்தவப்பயனாய் ஒரே மகளாக ஒப்பற்ற மகளாக சந்திரமதி என்னும் திருப்பெயரோடு நான் பிறந்தேன். தேவரகசியத்தின்படி குழந்தையாக இருக்கும் பொழுதே எனக்கும் என் கணவருக்கும் திருமணமானபடியினால் என் கணவர் கட்டிய மாங்கல்யம் நாளுக்கு நாள் அழகோடு வளர்ந்து வந்தது.  என்கணவருக்கு மட்டும் தான் என் கழுத்திலுள்ள மாங்கல்யம் தெரியும் அது மற்ற யாவரின் கண்ணுக்கும் தெரியாது. நான் பருவமடைந்தவுடன் என் தந்தை நடத்திய சுயவரப்போட்டியில் கலந்துகொண்டு அயோத்தியை ஆளக்கூடிய  திரிசங்கு சக்கரவர்த்தியின் ஒரே மகனான ஒப்பற்ற மகனான சத்தியம் தவறாத அரிச்சந்திர மன்னன் என்னை திருமணம் செய்துகொண்டார். தேவர்கள் எல்லோரும் வந்திருந்து எங்களை ஆசீர்வதித்து இளமையிலேயே எங்களுக்குத்திருமணம் நடந்ததை எங்களுக்கு உணர்த்தி தேவரகசியத்தின்படி இளமையில் அரிச்சந்திரமன்னன் எனக்குக்கட்டிய தாலியானது என் கணவராகிய அரிச்சந்திரமன்னனுக்கு மட்டும் தான் தெரியும் என்றுரைத்து தேவலோகமடைந்தனர்.  சத்தியம் தவறாமல் என் கணவர்  அயோத்தியை ஆண்டு கொண்டு வந்த பொழுது விஸ்வாமித்திர முனிவரின் சூழ்ச்சியால் நாடிழந்து, நகரிழந்து, கணவனைப்பிரிந்து, தற்பொழுது என் ஒரேமகனான லோகிதாசனையும் பாம்புக்கடியால் இழந்து நான் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றேன் என்று தன்னுடைய முழு வரலாற்றையும் கூறினாள் சந்திரமதி.

அரிச்சந்திரன் உண்மையை அறிதல்
இதைக்கேட்ட அரிச்சந்திரன், அய்யய்யோ! சந்திரமதி! நான்தான் உன் கணவன் அரிச்சந்திரன்! நம்மகன் இறந்துவிட்டானா?. நான் என்ன செய்வேன்! என்று சுடுகோலை கீழே போட்டுவிட்டு அழுது புலம்பினான் அரிச்சந்திரன். பிறகு அழுகையை நிறுத்திவிட்டு தம்மைத்தேர்த்திக்கொண்டு தன் மனைவியையும் தேர்த்தி தன்மனைவியிடம் பேசலானார் அரிச்சந்திரன். சந்திரமதி! எனக்குச்சேரவேண்டிய வாய்க்கரிசி மட்டும் எனக்கு வேண்டாம் ஆனால் என் எஜமானனுக்குச்சேரவேண்டிய கால்பணமும்,  முழந்துண்டும் கட்டாயம் தேவை, அப்படி இருந்தால் தான் நான் நம் குழந்தையின் பிணத்தை எரிக்கமுடியும் ஏனென்றால் நான் சத்தியம் தவறாதவன், எந்த நிலையிலும் கடமையைத்தவறாதவன், எனவே உனடியாக நீ உன் எஜமானரிடம் சென்று அன்பாக வேண்டி கால்பணத்தையும் முழந்துண்டையும் பெற்றுக்கொண்டுவா என்று ஆறுதல் வார்த்தைகளைக்கூறி சந்திரமதியை அனுப்பினார். அளவில்லாத துயரங்களுடன் தன் எஜமானரின் வீட்டை நோக்கிச்சென்றுகொண்டிருந்த சந்திரமதி வழியில் ஒரு அழகான ஆண்குழந்தை இறந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தாள். தான்  கண்டகுழந்தையைப்பார்த்தவுடன் தன் மகன் லோகிதாசனின் நினைவு சந்திரமதிக்கு வந்தது. உடனே, அந்தக்குழந்தையை தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கதறினாள்.

சந்திரமதிக்கு  மரணதண்டனை வழங்குமாறு            காசிராஜன் கட்டளையிடுதல்
அந்த நேரத்தில் காசிராஜனுடைய குழந்தை காணாமல் போய்விட்டதை அறிந்து காசிராஜனின் காவலாட்கள் காணாமல் போனக்குழந்தையைத்தேடிக்கொண்டு வந்தனர். சந்திரமதியின் தோள்களில் காசிராஜனின் குழந்தை இருப்பதைக்கண்ட காசிநாட்டுக்காவலர்கள் சந்திரமதிதான் குழந்தையைத்திருடியவளென்றும். அவள் தான் குழந்தையை கொலை செய்து விட்டாள் என்றும் தீர்மானித்து சந்திரமதியை அரசனிடம் கொண்டு நிறுத்தினர். காசிராஜன் சந்திரமதியை விசாரணைசெய்யாமல் சந்திரமதியைக்குற்றவாளி எனத்தீர்மானித்து அவள் சிரசை வெட்டிக்கொல்லுமாறு தன் காவலர்களுக்குப்பணித்தார். காசிநாட்டுக்காவர்கள் சந்திரமதியை காசிநாட்டின் பிரதான மயானக்காவலனான வீரவாகுமூலம் அரிச்சந்திரனிடத்திலே சேர்ப்பித்து அரசகட்டளையைக்கூறினர்.   மிகவும் மனம் கலங்கிய அரிச்சந்திரன் தன் மனைவி குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அரச கட்டளைக்குப்பணிந்து தன் கடமையைச்செய்ய தீர்மானித்தார்.

அரிச்சந்திரன் அரசகட்டளையை நிறைவேற்றுதல்
அரிச்சந்திரன்  சந்திரமதியை நோக்கி அவள் கழுத்தை நீட்டுமாறு பணித்து வாளை ஓங்கி கழுத்தை வெட்டுவதற்கு முற்பட்டபோது விஸ்வாமித்திரர் வந்து தடுத்தார். அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரைப்பார்த்து ஏன்? இந்த நேரத்தில் வந்து என் கடமையைச்செய்யவிடாமல் தடுக்கின்றீர் என்று கேட்டார். அதற்கு விஸ்வாமித்திரர், அரிச்சந்திரா! உன் மனைவி குற்றமற்றவள் எனவே அவளைக்கொல்வது தவறல்லவா? எனவே, அவளைக்கொல்லாதே என்று சொன்னார்.  அதைக்கேட்ட அரிச்சந்திரன், அய்யா!  முனிவரே! என் மனைவி குற்றமற்றவள் என்பது எனக்கும் தெரியும், இருந்தாலும் அரச கட்டளைப்படியும் என் தொழில் தர்மப்படியும் நான் கடமையாற்றுவது தான் தர்மம் எனவே, நான் சந்திரமதியின் கழுத்தை வெட்டுவதுதான் சரி என்று சொல்லி இரண்டாவது தடவையாக வாளை ஓங்கி கழுத்தின் மீது வெட்டினார் அரிச்சந்திரன்.  என்ன ஆச்சர்யம்! சந்திரமதியின் கழுத்தில் பட்டவெட்டு பூமாலையாக கழுத்தில் விழுந்திருந்தது. தன் கடமையை சரிவர செய்யமுடியவில்லையே என்று நினைத்த அரிச்சந்திரன் உலகத்தின் தலைவனாகவும், தான் தற்பொழுது வாழும் காசிநகரத்தின் தலைவனாகவும் விளங்கக்கூடிய அன்னை விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதரைப்பணிந்து, இறைவா! நான் சத்தியத்திற்கும்  தர்மத்திற்கும் கட்டுப்பட்டவன் என்பது உண்மையானால் இதோ இந்த மூன்றாவது வெட்டில் சந்திரமதியின் தலை துண்டாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மூன்றாவது வெட்டிற்காக வாளையோங்கினான் அரிச்சந்திரன். 

உமாமகேஸ்வரன் காட்சிக் கொடுத்தல்
உலகத்தின் அன்னை விசாலாட்சிதேவியும், உலகத்தின் தந்தை காசிவிஸ்வநாதரும் ரிடபவாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு தேவர்கள் சூழ காட்சிக்கொடுத்து அரிச்சந்திரனை தடுத்து நிறுத்தி ஆசீர்வதித்தனர்.
அரிச்சந்திரா! தர்மத்தின் தலைவனே! தர்மத்தின் காவலனே! கவலைப்படாதே உன் மனைவி குற்றமற்றவள் ஆகையினால் தான் உன்னால் அவளைக்கொல்ல முடியவில்லை, சத்தியமும் தர்மமும் ஒருவரை சோதிக்கும் ஆனால் அது யாரையும் கைவிட்டுவிடாது. ஈரேழு பதினான்கு லோகங்களை உள்ளடக்கிய இவ்வுலகத்தில் உமக்கு நிகரான சத்தியவான் யாரும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் இந்த உலகத்தில் சத்தியத்தின் ஒரே தலைவன் நீர்மட்டுமே என்பதை நிரூபணம் செய்வதற்காகவும் தேவசபையின் கட்டளைப்படி உமது வாழ்க்கையில் சத்திய சோதனை நடத்தப்பட்டது அதில் நீ வென்றுவிட்டாய்,  அது மட்டுமல்லாமல் உம்மை சோதித்தவர்கள் அனைவரும் தேவர்கள்;  நீர்காத்தது சுடுகாடு அல்ல யாகசாலை; அதுமட்டுமல்ல நீ இழந்ததாகக்கருதும் உன்மகன் மற்றும் காசிராஜனின் மகன் ஆகிய இருவர்களும் சாகவில்லை அவர்கள் இருவரும் என் மைந்தர்கள் முருகன் மற்றும் விநாயகனுடன் கயிலாயத்திலே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி அந்த இரண்டு குழந்தைகளையும் உயிருடன் மயானத்திற்கு வரவழைத்து ஆசீர்வதித்தார் இறைவன்.

லோகிதாசனுக்கு அயோத்தியை முடிசூட்டல்
இதுநாள் வரை நீ, இழந்ததாகக்கருதும் அயோத்தி நாட்டை உன் பிரதம அமைச்சர் சத்தியக்கீர்த்தி சத்தியம் தவறாமல் ஆட்சிசெய்து கொண்டு வருகிறார். எனவே, உம் நாட்டையும் நீ இழக்கவில்லை எனவே, மீண்டும் அரசாட்சியை ஏற்றுக்கொண்டு வாழ்வாயாக! என்று ஆசீர்வதித்தார் பரமேஸ்வரன். யாருக்கும் கிட்டாத பெரும்பயனான இறைவனின் பரிபூரண தேவசபைபோடு கூடிய காட்சியைக்கண்ட அரிச்சந்திரன் பெருமகிழ்ச்சியடைந்தார். இறைவனை நோக்கி ஒரு விண்ணப்பம் செய்தார், இறைவா! என்மகன் லோகிதாசனுக்கு அயோத்தியை முடிசூட்டுங்கள் என்று வேண்டினார். அவ்வாறே லோகிதாசனுக்கு இறைவனின் கட்டளைப்படி முடிசூட்டப்பட்டது. இறைவன் லோகிதாசனை ஆசீர்வதித்தார். அரிச்சந்திரன் இறைவனை நோக்கி மீண்டும் ஒரு விண்ணப்பம் செய்தார். இறைவா! நான் இதுநாள்வரை இந்த மயானத்திலேயே இருந்துவிட்டேன் ஆகபடியினாலே இந்தமயானத்தை அரசாட்சி செய்யக்கூடிய ஒரு சிறந்த  தெய்வீகப்பணியை எமக்கு அளித்து என்னை சிறப்பு செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டார்.

சத்தியத்தின் காவல் தெய்வமாக அரிச்சந்திரன் நியமிக்கப்படல்
அரிச்சந்திரனின் வேண்டுகோளைக்கேட்ட இறைவன், அரிச்சந்திரனைப்பாத்து, அரிச்சந்திரா! நீ விரும்பியபடி பூலோகத்திலுள்ள அனைத்து மயானங்களிலும் நீர் தர்மத்தின் தலைவனாக காவல்தெய்வமாக இருந்து பூலோகத்தில் மரணமடையும் ஒவ்வொரு ஆன்மாவும் உம்மைவந்து வணங்கியபிறகு உம்முடைய அனுமதி பெற்ற பிறகு உம்முடைய கட்டளைப்படி தான் அடுத்த நிலையை அடையவேண்டும் என்கிற வரத்தை உமக்குத்தருகிறேன். இவ்வுலகில் பிறந்து மடியும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் அவரவர் செய்த நல்வினைத்தீவினைகளின்படி முக்தியையோ அல்லது மறுபிறவியையோ அல்லது சூன்யதிதி நிலையோ  அல்லது நரகமோ கொடுத்து அதன் பிரதியை சித்திரகுப்தனுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என்கிற வரத்தை நான் உமக்குக்கொடுக்கிறேன்.

நீர், உம்மனைவி கற்புக்கரசி சந்திரமதியுடன் சிரஞ்சீவியாக இப்பூவுலகில் வாழ்ந்து தர்மத்தின் தலைவனாக இவ்வுலகில் தேவர்களுளொருவனாகி உன் மனைவியை உன் ஆத்மபீடத்தில் சுமந்துகொண்டு உன் கடமைகளை ஆற்றுவாய் என்று ஆசீர்வதித்து மறைந்தார். இறைவனின் கட்டளையை ஏற்று அவ்வாறே தன் மனைவியை ஆத்மபாகத்தில் சுமந்துகொண்டு தன் கடமையைச்செய்யலானார்  அரிச்சந்திரன்.

விஸ்வாமித்திரர் தோல்வியை ஒப்புக்கொள்ளுதல்
இச்சூழ்நிலையில் அரிச்சந்திரன் பொய்யன் என்று நிரூபிக்கத்தவறிய விஸ்வாமித்திரர் தன் தவறான செயலுக்காக தேவசபையில் மன்னிப்புக்கேட்டார். தாம் ஒப்புக்கொண்டபடி தன் தவ வலிமையின் பாதியை வசிட்டருக்கு அளித்துவிட்டு மதுக்குடம் ஏந்தி தென்திசைநோக்கிப்புறப்பட்டார் விஸ்வாமித்திரர். அரிச்சந்திரன் வாழ்க! அவன் தர்மம் வாழ்க! அவன் சத்தியம் வாழ்க! என்று தேவர்களெல்லாம் பறைசாற்றினர். தேவசபை கலைந்தது, தேவேந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் பெருமகிழ்வெய்தினான்.

அரிச்சந்திரன் திருக்கோயில் - தர்மத்தின் பீடம்

அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரனுக்கு பூசை செய்து வீரசம்புகமுனிவர் அருளிய தர்மநீதிப் பாடல்கள் முழுவதும் பாடியபிறகு; அரிச்சந்திரனின் அனுமதி பெற்று பிறகு பிணங்கள் எரிக்கப்படுவதும் புதைக்கப்படுவதும் நடைபெற்று வருகின்றது. இன்னன்ன புண்ணியங்கள் செய்தவர்கள் இன்னன்ன உயர்வானப்பலன்களை அடைவார்கள் என்றும்; இன்னன்ன பாவங்கள் செய்தவர்கள் இன்னன்ன தாழ்வானப்பலன்களை அடைவார்கள் என்றும்  தர்மநீதிப் பாடல்களில் வீரசம்புகர் சொல்லியுள்ளார். ஆக, மரணமடைந்தவரின் ஆன்மாவின் பாபபுண்ணியக்கணக்குகள் அரிச்சந்திரனால் சரிபார்க்கப்பட்டு அடுத்த நிலை நிர்ணயிக்கப்படுகிறது.  அரிச்சந்திரனின் உயர்வு தெரியாமல் பல மயானங்களில் அரிச்சந்திரனின் சிலையை அமைத்து கோயில் கட்டி வழிபடாமல் தற்காலிகமாக ஒரு கருங்கல்லையோ அல்லது செங்கல்லையோ வைத்து அதை அரிச்சந்திரனாக பாவித்து மக்கள் கடமையாற்றி வருவதால் இவ்வுலகில் தர்மம் குறைந்து கொண்டே வருகின்றது. எனவே, ஒவ்வொரு மயானத்திலும் முறையாக அரிச்சந்திரனுக்குக்கோயில் கட்டி அவரை முறையாக பூசித்தால் இவ்வுலகில் மீண்டும் தர்மம் தழைத்தோங்கி இல்வுலகம் பல நன்மைகளையும் பெறும்; இவ்வுலக மக்கள் இன்பமாக வாழலாம் என்கிற சூட்சுமத்தை அருள்குரு காகபுஜண்டர் உபதேசித்துள்ளார்.

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com