Saturday 13 September 2014

விஸ்வாமித்திரமுனிவரின் இரண்டாம் கட்ட சோதனை





Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-37
Cell : 9600068631 - 9600068931


விஸ்வாமித்திரமுனிவரின் இரண்டாம் கட்ட சோதனை
அரிச்சந்திரனின் சத்தியத்தை சோதனை செய்ய பல்வேறு திட்டங்களைத்தீட்டிய விஸ்வாமித்திரர் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். தன்னுடைய தவவலிமையால் இரண்டு அழகானப் பெண்களைப் படைத்தார். தன்னால் படைக்கப்பட்ட இரண்டு பெண்களிடத்திலே அரிச்சந்திரன் அவைக்குச்சென்று ஆடல் பாடல்களைப்பாடி அரிச்சந்திரனை மகிழ்வித்து காம இச்சையை அரிச்சந்திரனுக்கு உருவாக்கி அவனது சத்தியத்தை கெடுத்து அவனைப்புணர்ந்து வரவேண்டும் என்று பணித்தார். விஸ்வாமித்திரர் மீண்டும் தன் அருமைப்பெண்களைப்பார்த்து  உங்களால் ஒருவேளை அரிச்சந்திரனோடு புணர்ச்சி செய்து அவனது கற்பைக்கெடுக்க முடியவில்லையென்றால் அவனது சிம்மாசனத்தின் மேல் சுழன்று கொண்டிருக்கும் சத்திய வேந்தனின் இலச்சனையாக விளங்கும் பூச்சக்கரக்குடையை பரிசாகப்பெற்று வாருங்கள் என்று பணித்தார். விஸ்வாமித்திரர் மீண்டும் தன் பெண்களைப்பார்த்து எனதருமைப்பெண்களே ஒருவேளை பூச்சக்கரக்குடையை உங்களால் பெறமுடியாமல் போனால் ஒரேயொரு பொய்யையாவது அரிச்சந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டு வெற்றியோடு திரும்புங்கள் என்று தான் படைத்த இரண்டு பெண்களுக்கும் ஆணையிட்டார்.

தன்னுடைய தந்தையின் ஆணையின்படி அந்த இரண்டு பெண்களும் அயோத்திமாநகரின் அரண்மனையை அடைந்தார்கள். தாங்கள் வடதிசையிலிருந்து வருவதாகவும்; தாங்கள் ஆடல்பாடல் கலையில் வல்லவர்களென்றும்; ஆகையினால் அரசனுக்கு முன்பாகக்கலையினுயர்வை நிரூபித்து பரிசு பெற வந்திருப்பதாகவும் அண்மனையில் கூறினர். அரிச்சந்திரனின் பிரதம அமைச்சராகிய சத்தியக்கீர்த்தியானவர் அரிச்சந்திரனிடத்திலே இந்த விவரத்தைச்சொல்ல அரிச்சந்திரரும் அதற்கு செவிசாய்த்து ஆடல் பாடல்களை நிகழ்த்துமாறு அரண்மனைக்கு வந்த இரு பெண்களையும் கேட்டுக்கொண்டார். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நன்றாக முடித்த பிறகு அதற்குண்டான பரிசைப்பெறுவதற்காக   அரிச்சந்திரனின் பாதங்களை இரு பெண்களும் பணிந்தார்கள். அரிச்சந்திரன் தன்னைப்பணிந்த இரண்டு பெண்களையும் பார்த்து தங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு அந்த இருபெண்களும் அரிச்சந்திரரைப்பார்த்து அய்யா, நாங்கள் எது கேட்டாலும் தருவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அரிச்சந்திரன் அந்த இருபெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே! சத்தியத்திற்குட்பட்டு,  என் சக்திக்குட்பட்டு எனக்கு உரிமையான நீங்கள் கேட்கும் நியாயமான பரிசை மட்டும் நிச்சயமாக என்னால் கொடுக்க முடியும் ஆகையினால் தாராளமாகக்கேளுங்கள் என்று சொன்னார்.

அந்த இரு பெண்களும் அரிச்சந்திரரைப்பார்த்து அய்யா! எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் ஆகையினாலே எங்களுடன் உடலுறவு கொண்டு எங்களின் காமப்பசியைத்தீர்த்து வையுங்கள் என்று கூறினர். அரிச்சந்திரன் அந்த இரு பெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே! நான் ஏகபத்தினி விரதன்,  என்னுடைய மனைவி சந்திரமதியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் நான் மனதாலும் தொடமாட்டேன்;  எனவே, என் மனைவிக்குச்சொந்தமான என்னை நீங்கள் கேட்பது தவறு எனவே, வேறொரு பரிசைக்கேளுங்கள் நான் தாராளமாகத்தருகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்களும் அரிச்சந்திரரை நோக்கி அய்யா! உங்களின் சிம்மாசனத்தின் மேல் சத்தியத்தின் இலச்சனையாக எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கின்றதே அந்த பூச்சக்கரக்குடையை எங்களுக்குப்பரிசாகக்கொடுங்கள் என்று கேட்டனர். அரிச்சந்திரர் அந்த இரண்டு பெண்களையும் பார்த்து அன்புப்பெண்களே சத்தியத்தின் இலச்சனையாகத்திகழும் பூச்சக்கரக்குடை எனக்குச்சொந்தமானதல்ல; ஆகபடியினாலே என் நாட்டு மக்களுக்குச்சொந்தமான பூச்சக்கரக்குடையை உங்களுக்கு பரிசாகக்கொடுக்க எனக்கு அதிகாரமில்லை அதுமட்டுமல்லாமல் இந்த நாட்டில் சத்தியம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதற்கு அடையாளமாகத்தான் என் சிம்மாசனத்தின் மேல் பூச்சக்கரக்குடை சுழன்று கொண்டிருக்கிறது; எனவே அதை அரசவையிலிருந்து எடுத்து விட்டால் என் நாட்டில் சத்தியம் என்னும் நெறி நின்று விடும்; பிறகு அதர்மம் பிறக்க ஆரம்பித்து விடும்; ஆகையினாலே வேறு ஏதாவதொரு பரிசைக்கேளுங்கள் கட்டாயம் கொடுத்து விடுகிறேன் ஏனென்றால் அரிச்சந்திரன் சொன்ன சொல்லை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றத்தவறாதவன் என்று அந்தப்பெண்மணிகளிடம் திருவாய் மலர்ந்தருளினார் அரிச்சந்திரர்.

அந்த இரு பெண்களும் அரிச்சந்திரரை நோக்கி, அய்யா! நாங்கள் கேட்கும் பரிசை உங்களால் தர இயலாது என்கிற பொய்யை கூறிவிடுங்கள் நாங்கள் அதை பரிசாக எற்றுக்கொண்டு விடுகிறோம் என்று கூறினர். அதற்கு அரிச்சந்திரன் அந்த பெண்களைப்பார்த்து அன்புப்பெண்களே நான் எப்பொழுதும் சொன்ன சொல்லை இல்லையென்னு சொல்லமாட்டேன் ஆகபடியினாலே சத்தியத்திற்குட்பட்ட எனக்குச்சொந்தமான ஒரு பரிசை என்னிடத்தில் கேளுங்கள் கட்டாயம் தருகின்றேன் என்று சொன்னார். தமது முயற்சிகளில் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிய  இரு பெண்களும் இதற்கு மேல் எங்களுக்கு எந்த பரிசும் வேண்டாம் என்று சொல்லி விட்டு அவையை விட்டு நீங்கி விஸ்வாமித்திரரிடத்திலே சென்று முறையிட்டனர்.

விஸ்வாமித்திரமுனிவரின் முன்றாம் கட்ட சோதனை
தன்னுடைய தொடர் முயற்சிகளெல்லாம் தோல்விகள் பெறுவதை அறிந்த விஸ்வாமித்திரர் மூன்றாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். தேவர்களைத்துணையாகக்கொண்டு மிகக்கொடிய மிருகங்களை உருவாக்கி அவைகளை அயோத்திமாநகருக்குச்சென்று விளைபயிர்களையெல்லாம் அழித்து வரும்படி கட்டளையிட்டார். எஜமானின் விருப்பப்படி கொடிய மிருகங்களெல்லாம் அயோத்தி மாநகருக்குள் சென்று அந்நாட்டிலிருந்த அனைத்து பயிர்களையும் அழித்துவிட்டுச்சென்றது.

நாட்டின் குடிமக்களெல்லாம் மன்னன் அரிச்சந்திரனிடத்திலே சென்று முறையிட்டனர்.  அரிச்சந்திரன் தன்னுடைய அரசு கருவூலத்திலிருந்து பொன்பொருள்களை குடிமக்களுக்கு வாரிவழங்கி குடிமக்களின் குறைகளைத்தீர்த்து வைத்தான். தன்னுடைய தொடர்முயற்சிகளெல்லாம் தோல்விகள் பெறுவதை அறிந்த விஸ்வாமித்திரர் நான்காவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார்.

விஸ்வாமித்திரமுனிவரின் நான்காம் கட்ட சோதனை
தேவசபையில் இருந்த வருணனை அழைத்து அயோத்தி மாநகரில் தொடர்ந்து மழைபெய்யாமல் இருக்கும்படி கட்டளையிட்டார். வரட்சியின் கொடுமை தாங்கமுடியாமல் குடிமக்களெல்லாம் அரிச்சந்திரனிடம் முறையிட்டனர். அரிச்சந்திரன் மீண்டும் தனது அரசு கருவூலத்திலிருந்து பொன்பொருள்களை குடிமக்களுக்கு வாரி வழங்கி குடிமக்களின் குறைகளைத்தீர்த்து வைத்தார்.

விஸ்வாமித்திரமுனிவரின் ஐந்தாம் கட்ட சோதனை
விஸ்வாமித்திரர் ஐந்தாம் கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். அரிச்சந்திரன் அவையை அடைந்த விஸ்வாமித்திரர் தனக்கு ஒரு தானம் வேண்டுமென்று அரிச்சந்திரரைப்பார்த்துக்கேட்டார். அரிச்சந்திரர் விஸ்வாமித்திரரை வணங்கி தாங்கள் எதுவேணுமானாலும் கேளுங்கள் அதை நான் கட்டாயம் தருகிறேன் என்று வாக்களித்தார். விஸ்வாமித்திரர் அரிச்சந்திரரை நோக்கி அய்யா! நீங்கள் சத்தியம் தவறாது ஆட்சி செய்து வரும் இந்த அயோத்தி நாட்டை எனக்கு தானமாக அளியுங்கள் என்று கேட்டார்.

அரிச்சந்திரன் தனது நாட்டை விஸ்வாமித்திரருக்கு தானம் செய்தல்
சொன்ன சொல் தவறாத வாய்மை வேந்தன் அரிச்சந்திரன் மனமுவந்து எள்ளும் தண்ணீரும் கொண்டுவந்து தர்ப்பணம் செய்து தன் நாட்டை மகிழ்ச்சியுடன் விஸ்வாமித்திரமுனிவருக்கு தானம் செய்தார். பிறகு விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனைப்பார்த்து அய்யா அரிச்சந்திரனே! நீர்மட்டும் உமது நாட்டை தானம் செய்து கொடுத்தால் அதுபோதாது உமக்கு உரிமையான மனைவிக்கும் இந்த நாடு சொந்தாமானது அது மட்டுமல்லாமல் உன் தந்தைக்குப்பிறகு இந்த நாடு உமக்கு உரிமையானதால் பாட்டன் சொத்து பேரனுக்கு உரிமையாவதால்  இந்த நாடு உமது மகனுக்கும் உரிமையானது ஆகபடியினாலே உங்களின் மனைவியையும் மகனையும் கூப்பிட்டு அவர்களையும் இந்த நாட்டை எனக்கு தானம் செய்யச்சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரன் தன்னுடைய மனைவி மற்றும் மகனை அழைத்து அவர்களையும் தானம் செய்யவைத்தார். தானத்தை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் அரசவையைக்கூட்டி குடிமக்களின் முன்னிலையில் தம்மை முடிசூட்டி மன்னனாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அரிச்சந்திரனும் அவ்வாறே இசைந்து அவையைக்கூட்டி குடிமக்கள் முன்னிலையில் விஸ்வாமித்திரருக்கு முடிசூட்டி அழகு பார்த்தார். அரிச்சந்திரன் சத்தியத்தைக்காக்க சொன்ன சொல் தவறாமல்; பொய்யுரைக்காமல், தனது நாட்டையே விஸ்வாமித்திரருக்கு தானமாக வழங்கியதை கண்ணுற்ற குடிமக்கள் மனம் கலங்கி அழுதனர். 
அரிச்சந்திரன் அவர்களுக்கெல்லாம் ஆறுதல் சொல்லி, என்னுடைய குடிமக்களாகிய நீங்களெல்லோரும் என் போன்று சத்தியம் தவறாது வாழ்பவர்களாதலால் உங்களின் தலைவனான என்னுடைய செயலைக்கண்டு நீங்கள் மனவருத்தம் அடையக்கூடாது; எனவே, மனமகிழ்வுடன் புதிய மன்னராகிய விஸ்வாமித்திரருக்கு ஆதரவு தந்து அவருக்குக்கீழ்பணிந்து வாழுங்கள் என்று உபதேசித்தார். சத்தியம் தவறாத குடிமக்களும் அவ்வாறே செய்வதாக அரிச்சந்திரரிடத்திலே வாக்களித்தனர்.

விஸ்வாமித்திரமுனிவரின் ஆறாம்  கட்ட சோதனை
அயோத்தியின் அரசனாக பதவியேற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் ஆறவாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார். அரிச்சந்திரனை நோக்கி அய்யா!  அரிச்சந்திரனே! உம்முடைய நாடு எமக்கு சொந்தமாகிவிட்ட படியினால் நீங்கள் என் நாட்டில் இருக்கக்கூடாது;  எனவே, உடனடியாக குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கட்டளையிட்டார்.  அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை வணங்கி தன் மனைவி சந்திரமதியையும் தன்மகன் லோகிதாசனையும் அழைத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேற ஆயத்தமானார். அப்பொழுது அயோத்தி நாட்டு குடிமக்களெல்லாம் அரிச்சந்திரரை தடுத்தனர்.  அரிச்சந்திரன் குடிமக்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக்கூறி மனுநீதியின் உயர்வுகளைக்கூறி அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறி நடக்க ஆரம்பித்தார்.

விஸ்வாமித்திரமுனிவரின் ஏழாம் கட்ட சோதனை
விஸ்வாமித்திரர் ஏழாவது கட்ட நடவடிக்கைக்குத்தயாரானார், நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் அரிச்சந்திரனை திடீரென்று தடுத்தார். அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி தான் தடுக்கப்பட்டதற்கான காரணத்தைக்கேட்டார். விஸ்வாமித்திரர் அரிச்சந்திரனை நோக்கி அய்யா! அரிச்சந்திரனே! முன்னொரு சமயம் உலக நலன் கருதி யாகம் செய்வதற்காக பொருளுதவி வேண்டி நான் உங்களிடம் வந்தேன் அந்த நேரத்தில் தாங்களும் இசைந்து பல்லாயிரம் பொன்களை எனக்கு தானமாகக்கொடுத்தீர்கள்; அப்பொழுது அவ்வளவு பொருள்களையும் உடனடியாக எடுத்துச்செல்வதற்கு என்னால் இயலாத காரணத்தினால் அவ்வளவு பொன்பொருள்களையும் உம்மிடத்தில் அளித்து உமது அரசு கருவூலத்திலேயே என் பெயரிட்டு பாதுகாக்கும்படியும் நான் மீண்டும் வேண்டும்பொழுது தரவேண்டுமெனவும் உம்மிடத்திலே சொல்லிவிட்டுச்சென்றேன்; தற்பொழுது அப்பொன்பொருள் எனக்குத்தேவைப்படுகின்றது எனவே அப்பொருளை எமக்கு திருப்பித்தந்துவிட்டு நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று பணித்தார். விஸ்வாமித்திரரின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட அரிச்சந்திரன் விஸ்வாமித்திரரை நோக்கி! அய்யா விஸ்வாமித்திரமுனிவரே! தாங்கள் கொடுத்த பொன்பொருள் அனைத்தும் அரசுக்கருவூலத்திலேயே உங்கள் பெயரிட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது ஆகையினால் உங்கள் பொருள் எங்கும் போய்விடவில்லை.  தற்பொழுது தாங்கள் அயோத்தி மன்னரான படியினால் நீங்களே அந்தபொருளை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.  உடனே, விஸ்வாமித்திரர், அரிச்சந்திரனை நோக்கி அய்யா அரிச்சந்திரனே! உங்கள் நாட்டையே எனக்கு தானம் செய்த பிறகு உங்கள் நாட்டிலுள்ள அனைத்து பொருட்களும் எனக்கு சொந்தமாகிவிட்டபடியினால் நீங்கள் எனக்குக்கொடுத்தவாக்கின்படி எனக்குச்சேரவேண்டிய பொன்பொருள்களை கொடுத்துவிட்டு பிறகு இந்த நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று சென்னார்.

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

 


No comments:

Post a Comment