Tuesday 17 September 2013

குதம்பைச் சித்தர் திருமூலர் மெய்ஞானம்




ஆசை விடவிட ஆனந்த மாகும்.
குதம்பைச் சித்தர் திருமூலர் மெய்ஞானம்
நாம் பிறந்த நொடியில் இருந்து கடைசி மூச்சு வரை எப்படி காற்றின் தேவை அவசியம் ஆகிறதோ, அப்படியே வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு தேவை அவசியமாகவும், அத்யாவசியமாகவும் ஆகிப் போகிறது. அந்த வகையில் தேவைதான் மனித வாழ்வின் ஆதாரம்.  தேவைகளே நம் வாழ்வின் அத்தனை தேடல்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இந்த தேடல்கள் எப்போதும் ஒரு தொடர் கதையைப் போலத்தான், முடிவடைவதே இல்லை. ஒரு தேவை பூர்த்தியானால், அடுத்தடுத்த தேவையை இலக்காக்கிக் கொண்டு நகர்கிறது. இந்த பயணத்தையே நாம் ஆசை என்கிறோம்.  

இந்த தேவைகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. இது அவரவர் வளரும் சூழலைப் பொறுத்தவை.சிலருக்கு பணத்தின் மீது ஆசை, சிலருக்கு பகட்டான வாழ்க்கையின் மீது ஆசை, வேறு சிலருக்கோ வீடு வாசல் நிலம் இவைகளின் மீது ஆசை, இந்த ஆசைகள் எல்லாம் நமக்கு தேவையான, தகுதியான ஆசையாகவே இருக்கின்றவரையில் அதிகம் பிரச்சினை வராது. இது அளவு மீறி  தீவிரமாக வெளிப்படும்போது கவலையும் பிரச்சினைகளும் ஆரம்பித்து விடும்.அளவுக்கு மீறிய ஆசைகளே நம் அத்தனை துயரத்திற்கும் காரணம் என்கிறார் கௌதம புத்தர். பேராசை பெரு நஷ்டம் என்கிறது நம் முதுமொழி.

தேவை ஆசையாக மாறி, அந்த ஆசைகளே நம்முடைய முழுமுதற் தேவையாகிப் போகிற நிலையில் தான் நமது மனநிம்மதி போய்விடுகிறது. அதற்காக ஆசைப்படக்கூடாதா? ஆசைப்படாமல் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும் என்கிற கேள்வி வரும். யாரும், எதற்கும் ஆசைப்படலாம் ஆனால் நாம் ஆசைக்கு அடிமையாகிவிடக்கூடாது. ஆசை என்பது அடுப்பில் எரிகின்ற தீயைப்போல அடக்கமாக இருக்கவேண்டும். நெருப்பு அடுப்பிற்குள் அடங்கி எரியும் போது சமையல் ஆகும். ஆனால் அந்த நெருப்பே எல்லையை மீறி கூரை வரையில் எரிந்தால் வீடே சாம்பலாகி விடும் இல்லையா.

இதைத்தான்  குதம்பைச் சித்தர் பின்வருமாறு சொல்கிறார்.

பொருளாசை உள்ளஇப் பூமியில் உள்ளோர்க்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி
பேராசை கொண்ட மனிதர்கள் வாழும்போதே அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறார்கள். அளவுக்கு மீறிய பொருளாசை கொண்டவர்களுக்கு நரகம் இங்கேயே கிடைத்து விடுகிறது  என்கிறார் குதம்பைச் சித்தர்.தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் அடிக்கடி அவமானத்திற்கு ஆளாவதையும், பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பதையும் பார்க்கலாம். எனவே ஆசையை அறுப்பதே ஆனந்ததிற்கு சிறந்த வழி என்கிறார் திருமூலர்

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாகுமே.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாம்.... எனவே தகுதிக்கு மீறிய ஆசைகளை தவிர்ப்பதன் மூலம் வாழும் நாட்களை நிம்மதி நிறைந்ததாக்கி  வாழ்வோம். 

No comments:

Post a Comment