Monday 6 October 2014

நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன் திருநட்சத்திரம் - ஐப்பசி அனுஷம்





Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


பூசலார் நாயனார் புராணம்


மன்னிய சீர் மறைநாவல்  நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்

அவதார தலம் - திருநின்றவூர்
முக்திதலம்      - திருநின்றவூர்
குருபூசை திருநட்சத்திரம் - ஐப்பசி , அனுஷம்
  
ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியிலும் அடியார் சேவையிலும் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார்.


பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தே தான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை, அகத்திலேயாவது  அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா  என்று தமக்குள் தீர்மானித்தார். அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருகம், தூபி, அர்த்த மண்டபம் , மகா மண்டபம் , யாக மண்டபம் , அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, ராஜ கோபுரம் முதலிய அனைத்தும் பொலிவோடு உருவாக்கினார்.


அடிமுதல் உபான மாதி யாகிய படைக ளெல்லாம்
வடிவுறுந் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மான
முடிவுறு சிகரந் தானும் முன்னிய முழத்திற் கொண்டு
நெடிதுநாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார். 


நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்ப எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது அகத்தே கோயில் எழுப்ப . எல்லாம் முடிந்த பின் கும்பாபிஷேக நாளை நிச்சயித்தார் . கும்பாபிஷேகத்திற்கு வேண்டிய தர்ப்பை , சமித்து , நெய் ,சிருக்கு ,சிரவம் முதலிய அனைத்தும் ஆயத்தம் செய்தார்

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காடவர்கோன் என்ற பல்லவ மன்னன் ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டினான் . நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியில்  கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தான் மன்னன்.

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளி அன்பா ! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை
கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். பூசலாரின் அன்பை இவ்வாறு அரசனுக்கு இறைவர் அறிவித்தார் .


நின்றவூர்ப் பூசல் அன்பன்
          நெடிதுநாள் நினைந்து செய்த
நன்றுநீ டால யத்து நாளை 

           நாம் புகுவோம் நீயிங்கு
ஒன்றிய செயலை நாளை
           ஒழிந்துபின் கொள்வாய் என்று
கொன்றைவார் சடையார் தொண்டர்
           கோயில் கொண்டருளப் போந்தார்.
 

பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்து  கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வர ஆவல் கொண்டான் மன்னன் . திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுதும் தேடியும் எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூர் அந்தணர்களை வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்ட மன்னன். பூசலாரைக் கண்டு  அவரது அடிகளைத் தொழுது எழுந்தான். அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில்  அமைத்துள்ளதாக வும் , இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். அடியேன், தேவரீர் கட்டி முடித்துள்ள திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன் , அத்திருக்கோயில் எங்குளது  என்று பணிவோடு வணங்கினான் மன்னன்.

மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார். அவர் உள்ளம் மருண்டார் . மன்னனிடம் காடவர் கோமானே அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினாரோ  இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடு பட்டேன்.  பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடிய வில்லை , அகத்திலாவது  கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டி , இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார்.
 


மன்னவன் உரைப்பக் கேட்ட
         அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
          எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
           மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்து 
           எடுத்தவா றெடுத்துச் சொன்னார்



அடியார் மொழிந்தது கேட்ட மன்னன் மருண்டான். உள்ளக் கோயிலின் பெருமையையும் அதில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையையும் எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில்  இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான். பின் மன்னன் தன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினான் 

பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் ஆறு காலமும் ஆகமநெறி வழுவாமல் உள்ளக் கோயில் முக்கண் பெருமானை வழிபட்டு வந்த நாயனார் முடிவில் அம்பலவாணருடைய அடிமலர் சார்ந்து ஆராவமுத இன்பம் எய்தினார்
                           போற்றி ஓம் நமசிவாய
                             திருச்சிற்றம்பலம்


Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

 

No comments:

Post a Comment