Tuesday 5 November 2013

அழகிய மணவாளம்



அழகிய மணவாளம்

திருஆனைக்கா, திருவரங்கம், டோல் கேட், உத்தமர் கோவில், நொச்சியம்...சரி, ஒரு எட்டு மாமி எப்படி இருக்கான்னு பார்த்துட்டு போகலாம். 'கோவில் கட கட ன்னு வந்துடுத்து. கட்டடம், ஸ்தபதி வேலை, ராஜ கோபுர சுதை சிற்பங்கள், எல்லாம் மும்முரமா நடந்துண்டு இருக்கு. இந்த வேகத்துக்கு பணமும் வந்ததுன்னா சௌகர்யமா இருக்கும். சரி, சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துண்டு கெளம்புங்கோ'.

மணச்சநல்லூர், கோபுரப். 'யாரோ கூப்ட மாதிரி இல்ல 'கஷ்டம், இத்தன வருஷமா கார் ஓட்றீங்க, இது கூட தெரியல. காத்து போச்சுன்னு நெனைக்கறேன்'. ஓரமாக நிறுத்தி விட்டு எல்லா டயரையும் செக் பண்ணினேன். மறுபடி 'உஷ்ஷ்ஷ்'. திரும்பிப் பார்த்தேன். 'யோவ், இந்த பக்கம் பார்யா, நான் பெருமாள் பேசறேன்'. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒருவரும் தென்படவில்லை. உதட்டை ஈரப் படுத்திக் கொண்டு 'பெருமாள்னா?' என்றேன். 'நான், சுந்தர ராஜ பெருமாள் யா, இது அழகிய மணவாளம்ங்கற ஊரு, கோவிலுக்கு வழி கேட்டு உள்ள வா, உன்கிட்ட கொஞ்சம் பேசனும்'.

இடது பக்கம் திரும்பும் இடத்தில் தலைப்பா கட்டு இளைஞன். உரமேறிய உடம்பு. 'போய் லெப்ட்ல டேர்ன் பண்ணுங்க'. கிராமப் பாதை. சுற்றுச் சுவர் பக்கத்தில் வண்டியை நிறுத்தினேன்.வழக்கம் போல் சிதிலமடைந்த கோவில், வாசலில் விளையாடும் குழந்தைகள், இடுங்கிய கண்களுடன் 'யாரது?' என்று பார்க்கும் நூற்றை கடந்த கிழவர், ஆடு, மாடுகள், மிகப் பெரிய ஆல மரம், மற்றொன்று சரிந்து. வலப்பக்கம் செங்கல் வைத்து கட்டப்பட்ட சிறு கோவில். வெகுவாக இடிந்து புதர் மண்டியிருந்தது. நுழைந்த உடன் கண்ணில் பட்டது இரு கைகளையும் இழந்த நரசிம்ஹர். கந்தக பூமியின் உஷ்ணத்தை பொருட் படுத்தாதவராய் வெட்ட வெளியில் தனியே குத்திட்டு உட்கார்ந்திருந்தார். (நெஞ்சு வலித்தது). அடுத்தது, நேரே மூலவர் தான்.

பெயருக்கு ஏற்றார் போல் சுந்தர ராஜன். பதினெட்டு அடி உயரம். 'வந்துட்டியா' என்பது போல் மெலிதான புன்னகை. இரு பக்கத்திலும் பதினாறு அடியில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள். அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பட்டர் எங்களை கடந்து உள்ளே போனார். மூப்பில் சுருங்கிய தேகம். கையில் வைத்திருந்த புளியோதரையின் வாசம் மூக்கை துளைத்து நாக்கை அடைந்து.....அபசாரம், இன்னும் நைவேத்யம் ஆகவில்லை. அர்ச்சனை செய்தார். ஏகமாய் பிரசாதம். பணம் கொடுத்தோம். (இன்னும் கொடுத்திருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது). வாங்கிக்கொண்டு புளியோதரை விநியோகத்திற்கு கிளம்பி விட்டார். (இப்போது வாசலில் கூட்டம் சேர்ந்திருந்தது). 'நீ கொஞ்சம் வெளில இரு, நான் வந்துடறேன்'.

'உம் பெருமாளே இப்போது சொல்லும் எதற்கு கூப்பிட்டீர்'. 'உமக்கு எத்தனை பொண்டாட்டி யா '. பெருமாள் சார், எடுத்த எடுப்புலயே என்ன இது ஏடாகூடமாய் ! 'ஒன்னு தான், அதுவே சமாளிக்க முடியல'. 'போன பல ஜென்மத்து அகமுடையாள் எல்லாரையும் ஞாபகம் இருக்கா'. 'என்னது !!!' அலறினேன். 'உமக்கு ஏன் என் மேல இந்த......'. 'இதப் பாரும், இந்த சோழ, பாண்டிய, பல்லவ, சேர, விஜய நகர, ஹொய்சால, மராட்டிய.... ராஜாக்கள் எல்லாம் பிக் பாங் டைம்லேர்ந்து நான் எடுத்த பல அவதாரத்துக்கும் கோவில் கட்டி, கூடவே ஏகப்பட்ட பேர்ல .....'சரி, சரி, புரிஞ்சுது, விஷயத்துக்கு வாரும்'. 'அதுலையும் இங்க நான், ரெண்டு தாயார் மட்டும் தான், வேற ஒரு ஈ, காக்கா வரது கிடையாது, நெனச்சு பாரும்'. மனசு இளகியது. நம் வர்க்கம். 'நான் என்ன பண்ணனும்'. 'நீர் தான் பேஸ்புக்ல என்னல்லாமோ எழுதறீரே, என்னை பத்தியும் எழுதுமேன், நான் இங்க வரவங்களுக்கு சந்தோஷமா, பிரதி உபகாரமா, வரத்தை அள்ளி கொடுக்கறேன். தேவிகளும் வாரி வழங்குவார்கள்'. 'சரி, பண்ணிடறேன்'. (சொன்னபடி பண்ணி விட்டேன். போய் பாருங்கள். உறங்காவல்லி ரங்கராஜனின் நேத்ர தரிசனத்தில் வேறு அனைத்தும் மறந்தது போல் அளவிட முடியாத ஆனந்தத்தை பெறுவீர்கள்).

அதெல்லாம் சரி, அதென்ன, உம்ம பேரு சுந்தர ராஜன், ஊரு பேரு அழகிய மணவாளம் '.

அதுவா, இங்க பக்கத்துலையே கோபுரப்பட்டில என்னோட ரெட்டை ஆதி நாயகப் பெருமாள் இருக்கார். அங்க ஸ்தல புராணம் கெடைக்கும். வெப் சைட் கூட இருக்கு. அதுக்கும் மேல தெரியணும்னா கூகுள் பண்ணிப் பாரும். அங்கேருந்து கொஞ்ச தூரத்துல திருபாச்சல்ங்கற ஊர்ல என் மச்சான் அவனீஸ்வரர், மேற்றலீஸ்வரர்னு ரெண்டு பேர்ல இருக்கார். அவனீஸ்வரர் கோவில்ல என்னோட இராமாயண அவதார காட்சிகள் செதுக்கி இருக்கு. அபாரம். (நானே சொல்லிக்க வேண்டி இருக்கு). ரெண்டாமத்தவருக்கு ஒரு நாகம் தான் துணை. பாவம். அங்கேயும் போயிட்டு எல்லாரை பத்தியும் எழுதும். உமக்கு புண்ணியமா போகும்'. 'செய்கிறேன் ஸ்வாமி'. 'ஓடும், உம்ம பார்யாள் நாலஞ்சு தடவை கூப்டாச்சு. எனக்கும் ரெண்டு பக்கமும் கழுத்து சூடா இருக்கு. உஷ்ணத்தை தனிச்சுக்கனும். போய் வாரும்'.

No comments:

Post a Comment