Saturday 23 November 2013

அழகிய மணவாளம்



கோழிக் கூட்டில் சந்தித்துக் கொண்ட அழகிய மணவாளனும், நம்மாழ்வாரும் அங்கிருந்து கிளம்பி வெவ்வேறு வழியில் பிரிந்தனர். ரங்கன் மைசூரின் வழியாக திருநாராயணபுரம் சென்றடைந்தான். அது ஹொய்சாளத்திற்கு உட்பட்ட ஒரு பகுதி. த்வார சமுத்திரத்தை (இன்றைய ஹளபேடு) தலை நகராகக் கொண்டு அந்த ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த வீர வள்ளாலன் சுல்தானோடு உடன் படிக்கை செய்து கொண்டிருந்தமையால் மேல்கோட்டை பாதுகாப்பானது என முடிவு செய்து அங்கு ரங்கனை கொண்டு வந்திருந்தனர். ஆனால், இப்போது குழுவினரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. ஒரு சிலர் இறந்து விட்டனர். பொக்கிஷங்கள் அனைத்தும் காடுகளில் திரிந்த கள்வர்களிடம் கொள்ளை போனாதால் பாதுகாப்புக்கென வந்தவர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். இன்னும் சிலர் அவர்களாகவே பிரிந்து சென்று விட்டனர். வழி தவறியவர்களோடு நாச்சியார்களும் போய்விட்டனர்.

1342. சத்திய மங்கலத்தில் தன் மனைவி, மகன், சுதர்சன ஆச்சார்யரின் இரு புதல்வர்களோடு வாழ்ந்து வந்த ஸ்வாமி வேதாந்த தேசிகர் ரங்கனை தரிசிக்க மேல்கோட்டை வந்தார். வீர வள்ளாலன் கண்ணூர் கொப்பத்தில் ஹொய்சாளர்கள் கட்டிய கோட்டையில் முகாமிட்டிருந்த மதுரை சுல்தானின் பாதிப் படையின் மீது போர் தொடுக்க சென்றிருக்கிறார் என்பதை அறிந்த தேசிகர் அழகிய மணவாளனை ரங்கத்திற்கு கொண்டு செல்ல இதுவே தக்க சமயம் எனக் கூறினார். ஒரு கை விரல்களின் எண்ணிக்கையாய் நலிவடைந்திருந்த குழுவும் அதற்கு சம்மதித்து ரங்கன் உற்சவ பேரத்தோடு சத்திய மங்கலத்தை அடைந்தது.

1342. ஹொய்சாளப் படை கண்ணூர் கோப்ப கோட்டையை சுற்றி வளைத்தது. பத்து மாதங்கள் நீடித்த அம்முற்றுகையினால் கோட்டைக்குள் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. பலர் இறந்தனர். தேவையற்றவர்கள் கொல்லப் பட்டனர். அப்படியும் உணவுப் பொருட்களின் இருப்பு போதவில்லை. கடைசியில், கோட்டையின் மேல் சமாதானத்திற்கான வெள்ளைக் கொடி பறந்தது. வள்ளாலன் சுல்தான் படையினர் கோட்டையை விட்டு வெளியேறினால் அவர்களை உயிருடன் விடுவதாக சொன்னார். அவர்கள், தாங்களாகவே அதை முடிவு செய்ய முடியாது, இரு வாரங்கள் அவகாசம் கொடுங்கள் மதுரை சென்று சுல்தானின் சம்மதத்தை பெற்று வருகிறோம் எனக் கூறினர். தம் முதுமை பிராயத்தில் இருந்த ஹொய்சாள அரசர் யார் சொல்லியும் கேட்காமல் போரினால் ஏற்படக்கூடிய உயிர் சேதத்தை தடுக்கும் பொருட்டு (முட்டாள் தனமாக) அதற்கு சம்மதித்தார். மேலும், அதற்கு முன் வருடம் தான் சுல்தான் படையை தங்களது இன்னொரு தலை நகராக விளங்கிய அருணை சமுத்திரத்தில் இருந்து ஹொய்சாளர்கள் வெற்றிகரமாக விரட்டி அடித்திருந்தனர். ஆகவே, சுல்தான் தங்களை வெல்ல முடியாது என இறுமாந்திருந்தார் வள்ளாலன். ஆனால், நிலைமை தலை கீழாக மாறியது.

உயிர் போனாலும் சரி, வள்ளாலனுக்கு அடிபணியக் கூடாது (அப்படி பணிந்து விட்டால் நாளை மதுரையும் பறிபோகும் அபாயம் உண்டு) என முடிவெடுத்து மதுரையில் இருந்து புறப்பட்டது சுல்தானின் படை. எதிர் பாராத நேரத்தில், எதிர் பாராத திசையிலிருந்து வள்ளாலப் படையை தாக்கியது. ஹொய்சாளர்கள் சுதாரிப்பதற்குள் அவர்களை கொத்துக் கொத்தாய் வெட்டி வீழ்த்தியது. சுல்தான் படையின் கை ஓங்கத் துடங்கியவுடன் ஹொய்சாளப் படையில் துருக்கியர்களின் மதத்திற்கு மாறியிருந்த இருபதனாயிரம் பேர் அவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டனர். இந்த திடீர் துரோகம் ஹொய்சாளர்களை நிலை குலைய வைத்தது. போரில் வள்ளாலன் தோற்றார். யானைகள், குதிரைகள், மற்றனைத்து சொத்துக்களையும் பறித்த பின் வள்ளாலனை கொன்று தோல் உரித்து வைக்கோல் அடைத்து ஊர் ஊராக எடுத்துச் சென்று மதுரை கோட்டையின் உச்சியில் தொங்க விட்டு வேடிக்கை பார்த்தான் சுல்தான்.

இந்நிலை என்று மாறுமோ என வருந்த வேண்டாம். இப்போர் நடப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே (1336) அதற்கான விதை இம்மண்ணில் விழுந்து வேரூன்ற ஆரம்பித்திருந்தது. விடிவானில் தோன்றும் கதிரவன் கடகடவென மேலெழுந்து பிரகாசிப்பது போல் இப்புண்ணிய பூமியின் மத்தியில் கோதாவரி நதிக் கரையில் ஸ்தாபிக்கப்பட்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த ஐம்பது வருடங்களுக்குள் தென்னகம் முழுவதையும் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தது. அங்கு அந்நியர்களின் மூச்சுக் காற்றுக் கூட உட்புகா வண்ணம் காத்தது. விழாக்கள், பண்டிகைகள் மீண்டும் கொண்டாடப் பட்டன. மாறி இருந்த மக்களின் வாழ்க்கை முறையும், வழி பாடுகளும் திரும்பின. இம்மண்ணின் கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பர்யங்கள் தழைக்கத் தொடங்கியது.

No comments:

Post a Comment