Tuesday 26 November 2013

இறையுணர்வும், அறநெறியும்

மனித இன வாழ்வுக்கு இறையுணர்வும், அறநெறியும் சரியான வழிகாட்டுதல்கள் ஆகும். இறைநிலை பற்றிய அறிவு என்பது ஒரு மாபெரும் மறைபொருள் விளக்கமாகும். இது ஒருவர் தன் அகத்தவத்தின் மூலம் மனச் சுழல் விரைவைக் குறைத்து அமைதி என்னும் மனநிலைக்கு வந்து, அந்த நிலையில் சிந்தித்து இறையுணர்வு பெற வேண்டும். சாதாரணமாக வாய் மொழியின் மூலமாகவோ, மந்திரங்கள் மூலமாகவோ, சடங்குகள் மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ இறைநிலையை உண்மையாக உணர முடியாது.இறைநிலை உணர்வு ஏற்படவில்லை என்றால் ஒரு மனிதனுக்கு அறநெறி வாழ்வும் அமையாது.
பலகாரணங்களால் இக்காலத்தில் இறையுணர்வு என்ற அறிவின் முழுமைப்பேறும், அறநெறி என்ற சீரமைந்த வாழ்வும் நிலை குலைந்து போயிருக்கின்றன. இதன் காரணமாகவே இன்று நாம் மனித குல வாழ்வில் காணுகின்ற எல்லா வகையான குழப்பங்களும், துன்பங்களும் நேர்ந்துள்ளன. அறிவின் சிந்தனையாற்றல் செயல்படாததனாலும், பழக்கத்தினாலும் தொடர்ந்து வருகின்ற செயல்கள் பலப்பல. களைகளை அகற்றுவது போன்றே இவற்றையும் அகற்றி விட வேண்டியது மனித இன வாழ்வுக்கும், வளத்திற்கும் நலமளிக்கும். விவசாயத்தில் பயிரை வளரவிடாது தடுக்கின்ற களைகளை போன்ற பல செயல்கள் உருவாகி சமுதாயத்தில் மண்டிக்கிடக்கின்றன.

"இறையுணர்வு பெற்று, அறம் ஆற்றி", வாழுகின்ற ஆன்மீக நெறியில் மனிதன் வாழ்ந்தால் - சமுதாயத்தில் ஏழ்மை என்பது இருக்காது. பொய், கொலை, களவு, சூது, விபச்சாரம் என்னும் ஐந்து வகையான பழிச் செயல்களும் இருக்காது. அறிவின் குறைபாட்டினால் தனக்கும், பிறருக்கும் துன்பங்களை விளைவிக்கின்ற குற்றங்களும் சமுதாயத்தில் நிலவா. எனவே வயது வந்த அனைவரும் முறையாக "குண்டலினி யோகம்" பயின்று இறையுணர்வு பெற வேண்டும். வாழ்வில் அறநெறியையும், இறையுணர்வையும் பின்பற்றி வாழ வேண்டும்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment