Saturday 23 November 2013

தட்டுங்கள் திறக்கப்படும்.


தியானம் என்றால் என்ன ? அதன் தேவை என்ன ? பலன் என்ன ? என்பதைக் குறித்து நம் முன்னோர்களே தீவிரமாக ஆராய்து விளக்கியிருக்கிறார்கள். உலகில் வேறு எந்த தேசத்திலும் தியானத்திற்கு இவ்வளவு முக்கியத்தும் தரப்படவில்லை. இன்று விஞ்ஞானிகளானாலும், உளவியல் நிபுணர்களானாலும், கடவுளே இல்லை என்று சொல்பவர்களானாலும், பிற தேசங்களில் பிற சமயங்களை பின்பற்றுபவர்களானாலும் எல்லோருமே பரவலாக தியானத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். உலக அளவில் நம் தேசத்திற்கென்றுஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் காரணம் யோகம், ஆன்மிகம் போன்ற விஷயங்களே. இங்கு வாழும் மக்கள் ஆன்ம பலம் மிக்கவர்கள். காரணம் நம் முன்னோர்களின் மரபு அணுக்கள் நம் உடலிலும் இருப்பதால்தான்.நல்லவனாக இருந்தாலும், கெட்டவனாக இருந்தாலும், எத்தகையவனாக இருந்தாலும், கடவுளே இல்லை என்று சொல்பவனாக இருந்தாலும் சரி அவனுக்குள்ளும் இந்த ஆன்மிக அணுக்கள் இயங்கிக் கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு இந்தியனின் முகத்திலும் இந்த ஆன்மிக ஓளியை காண முடியும்.
பொதுவாக தியானம் இரண்டு வகைப்படும். ஒன்று உபாசனை மற்றது நிதித்யாசனம். உபாசனை என்பது பக்தி நெறி என்று கொள்ளலாம். நிதித்யாசனம் என்பதை ஞான நெறி அல்லது யோக நெறி என்று கொள்ளலாம். நிதித்யாசனம் என்றால் ஆன்ம விசாரம். பதஞ்சலி யோக சாஸ்திரம் கூறும் சாதனையில் இயமம், நியமம் என்ற மனத்தூய்மை பயிற்சியில் ஆரம்பித்து, பிறகு ஆசனம், பிராணாயாமம் , மனதைப் புற் பொருள்களில் இருந்து பிரிக்க பிரத்தியாஹாரம்,பிரித்த மனதை ஓரிடத்தில் குவிக்கும் தாரணை எல்லாம் கடந்து ஏழாவது படியாக தியானம் வருகிறது. அதாவது ஞான நெறியைப் பொறுத்த வரை ச்ரவணம்(சாஸ்திரங்களைக் கேட்டல்), மனனம்( கேட்டவற்றைச் சிந்தித்தல்), நிதித்யாசனம்(தொடர்வது ஆராய்ச்சி அல்லது பயிற்சி) இது தியானம் போன்ற ஒரு நிலையே.
பக்தி நெறியில் பிரார்த்தனை, இறைவன் புகழைப் பாடுதல், பூஜை என்று தொடங்கி பிறகு தியானம் வருகிறது. உபாசனையில் தெய்வ வடிவத்தையோ, ஓளியையோ, ஆகாயத்தையோ, அன்பு, கருணை, வலிமை போன்ற பண்புகளையோ, மந்திரங்களையோ தியானப் பொருளாகக் கொண்டு தியானிப்பார்கள். அதாவது தங்கள் உணர்வை தியானப் பொருள் மீது செலுத்துவது உபாசனை. நிதித்யாசனம் என்பதில் உணர்வு குவிதலோ, சுயேச்சையின் முயற்சியோ இல்லை. உணர்வின் மூலக் காரணத்தைத் தேடுவதாகும். நான் என்ற எண்ணம் உணர்வு எங்கிருந்து வருகிறது என்று தேடி மூலக் காரணத்தை அடைவதே நிதித்யாசனம்.
தியானம் என்றால் வெறுமனே மனதை ஒருமைப்படுத்துவது மட்டுமே என்று கருதுகிறார்கள்.மனதை எந்தப் பொருளில் வேண்டுமானாலும் ஒருமைப்படுத்தலாம். நம் அன்றாட வாழ்வில் இயல்பாகவே இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இத்தகைய மன ஒருமைப்பாட்டால்எந்த வித பயனும் இல்லை. ஏனென்றால் இது தன்னுணர்வின்றி ஆசையின் தூண்டுதலால் நிகழ்கிறது. தியானம் என்பதோ, ஆசையிலிருந்து விடுபட்ட சுயேச்சையை ஓர் உயர்ந்த உணர்வு மையத்தில் குவிப்பதாகும். யோக தியானம் என்பது மனதின் செயல்பாடுகளை அறிந்து, ஆன்மாவாகிய புருஷனைப் பிரகிருதியிலிருந்து பிரிப்பதாகும். வேதாந்த தியானமோ தியானிப்பவரை தியானிக்கும் பொருளோடு இணைப்பதாகும். அதாவது ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியம்.
யோக தியானத்தில் எந்தப் பொருளையும் தியானிக்கலாம். வேதாந்த தியானத்திலோ கடவுளை மட்டுமே தியானிக்க வேண்டும். யோக தியானம் பழகுவதற்கு உண்மையைப் பற்றிய எந்த விஷயங்களையும் முன்னரே அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வேதாந்த தியானம் அவ்வாறல்ல. வேதாந்த நூல்கள் கூறும் கருத்துக்களை சாதகன் நன்கு அறிந்து உணர்திருக்கவேண்டும். அதாவது நூலறிவை, உண்மை அறிவாக மாற்றுவதே வேதாந்த தியானம். காலம் செல்லச் செல்ல எல்லா தியானங்களும் இணைந்து விட்டன. அதற்கு முக்கியக் காரணம் தந்திர மார்க்கமாகும். அவர்கள் கண்டு பிடிப்பான தந்திரம், மந்திரம், குண்டலினி போன்ற கருத்துக்களடங்கிய தியானமே இப்போது எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.
தியானம் என்பது கரை காண முடியாத உணர்வு என்ற கடலின் ஆழங்களில் காணாத கடவுளைத் தேடுவதாகும். பிரார்த்தனை செய்யும் போது இறைவன் நம்மிடம் வருவதற்கு காத்திருப்பது போல ஒவ்வொரு சாதகனும் தியானத்தின் மூலமாகக் காத்திருக்கிறான். எனினும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா ? பொறுமை எல்லை மீறும் போது, மேலும் காத்திருக்க முடியாமல் ஆன்ம தாகம் கொண்டு தேடத் தொடங்குகிறான். அப்படி ஆன்ம தாகத்தோடு ஆன்மாவானது தன் தலைவனை நோக்கித் தேடிக் கொண்டு செல்கின்ற அந்த சூக்குமமான இயக்கமே தியானம்.
அல்லாமல், வெறுமனே மனதை அமைதிப்படுத்துவது தியானமாகாது. மன அமைதி என்பது ஒரு முன்னேற்பாடு மட்டுமே. உலகப் பொருள்களை தேடுவது போல புற உலகில் இறைவனைத் தேடுவதல்ல தியானம். இது அகத் தேடல். நமது உணர்வுகளால் உணர்வுக்குள் தேடுவது. உணர்வு மையத்தில் கொண்டு போய் மனதைக் குவிப்பது. ஏனென்றால் ஆன்மிக உலகின் வாசல் இந்த மையத்தில்தான் மறைந்துள்ளது. மன ஆற்றல்கள் அனைத்தையும் கொண்டுபோய் அந்த மையத்தில் குவிக்கும் போது அது திறக்கிறது. எனவே தியானம் என்பது அகக் கோயிலின் கதவுகளைத் தட்டுவதே ஆகும்.

No comments:

Post a Comment