Saturday 16 November 2013

மௌனத்தின் குரல் எது

என்னிடம் ஒருவர் கேட்டார் மௌனத்தின் குரல் எது ? என்று. மௌனத்தின் குரல் அதாவது மௌனத்தின் ஒலி என்று எடுத்துக் கொள்ளும் போது அது ப்ரணவம். ப்ரணவ ஒலியானது மனதை அமைதிப்படுத்தும். அந்தப் பரணவ ஒலியிலிருந்தே மற்ற எல்லாம் வந்தன என்று சொல்வார்கள். ப்ரணவ ஒலியின் பாங்குடைய ஓசைகள் மனதை அமைதிப்படுத்தும். அதற்கு உதாரணமாக கடலின் ஓசை, வனத்தில் காற்றில் அசையும் மரங்களின் ஓசை, சங்கின் ஓசை இது போன்று பல ஓசைகள் ப்ரணவத்தின் பாங்கிலேயே அமைந்துள்ளன. எனவேதான் வனங்களிலே போய் தவம் செய்கிறவர்களை அந்த ஓசை சலனப்படுத்துவதில்லை. மேலும் அமைதியைத் தீவிரப்படுத்துகிறது. கடற்கரையில் போய் அமர்ந்தால் மனம் அமைதியாக இருக்கிறது என்று சொல்லக் கேட்கிறோம். ஆனால், கடலோ ஓயாது அலையடித்து இரைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், அந்த ஓசையில் ப்ரணவத்தின் பாங்கு மிகுந்திருப்தால், அவ்வளவு இரைச்சலையும் தாண்டி மனம் அமைதி அடைகிறது. மேலும் கடற்கரையில் எந்தத் தடையுமின்றி காற்று வேகமாக வந்து நம் காது மடல்களில் மோதி துளையினுள் நுழையும் போது சங்கின் ஓசை கேட்கிறது. அதுவும் ப்ரணவத்தின் பாங்குடைய ஓசையே. எனவே கடற்கரையில் மன அமைதி அதிகரிக்கிறது. இதே பின் நோக்கிப் போகும் போது ஒன்றிலிருந்து ஒன்று என்று எல்லாம் தோன்றியிருந்தாலும், எல்லாம் ப்ரணவமாகிய ஓசையிலிருந்தே வந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவேதான் நாத ப்ரம்மம் என்கிறார்கள். அந்த ப்ரணவமாகிய ஓசை எங்கிருந்து வந்தது. அது பரப்ரம்மத்திடமிருந்து வந்தது. அந்தப் பரப்ரம்மமோ மௌனமே வடிவானது. ஆக மௌனம் என்றால் இறைவன். அவரின் குரல் எது ? அது வேதம். வேதம் என்ன சொல்கிறது ? வேறொன்றும் சொல்லவில்லை, எல்லாவற்றையும் கடந்து மௌனத்தில் நிலைபெறவே சொல்கிறது. இதுவே மௌனத்தின் குரல்.

மௌனம் என்றால், இருபத்தி நான்கு தத்துவங்களும் அடங்கி நிற்பதுவே மௌனம். நாம் பொதுவாக பேசாமல் இருப்பதுவே மௌனம் என்கிறோம். பேசிக் கொண்டே இருப்பவரின் மனதில் அசாந்தி நிலவுகிறது. பேச்சுக் குறையும் அளவிற்கு மனம் சாந்தி அடைகின்றது. பேசியே ஜெயிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அது ஆன்மிக வெற்றி ஆகாது. நுணலும் தன் வாயால் கெடும் என்ற நாலடியார் பாட்டு சொல்வதைப் போல, பேசியே கெட்டவர்கள்தான் அதிகம்.முறை தவறி வாயைப் பயன்படுத்திக் கெட்டுப் போனவர்களே பேயாக அலைகிறார்கள் என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு விளைவித்துக் கொள்வதோடு, பிறர்க்கும் இன்னல் விளைவிக்கின்றனர். அத்தகைய வீண் பேச்சாளர்களுக்கும் பேரின்பத்திற்கும் வெகு தூரம். நிறைகுடம் ததும்புவதில்லை. அறிவிற் சிறந்தவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். கிணற்றின் வாயை சுற்றுச் சுவர் கட்டி பாதுகாக்கா விட்டால் காற்று மற்றும், விலங்குகள், மனிதர்களால் கிணறு மாசுபட்டு கிணற்று நீர் வீணாகி விடும் அது போல, மனிதனும் தன் வாயைக் கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. இரண்டு காரியங்களுக்கு இந்த வாயானது உதவுகிறது. ஒன்று, உணவை பொருத்தமான வேளையில் அளவாக உண்பவன் உத்தமனாக வாழ்கிறான். அதையே அளவு கடந்து புசித்து விட்டு தன் உடல் வாழ்வைப் பாழ்படுத்துபவன் அதமனாகிறான். மற்றொன்று பேச்சு. அளந்தெடுத்துப் பொருத்தமான சமயத்தில் தக்கவர்களிடம் மட்டும் பேச மனிதன் கடமைப்பட்டிருக்கிறான். அல்லாதவர்கள் துன்பப்பட நேரிடும்.

தவத்தில் நாட்டம் அதிகரிக்கும் அளவிற்கு ஒருவனிடம் பேச்சற்ற நிலை அதிகரிக்கிறது. யோகத்தைப் பொருத்த வரை முதற்கட்டமாக அமைவதே சொல்லையும், செயலையும் ஒன்று படுத்துவதுதான். உள்ளத்தில் இருப்பதுதான் உரையாக வடிவெடுத்து வரும். ஆனால், பெரும்பாலனவர்களுக்கு அவ்வாறு நடைபெறுவது இல்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே அதிகம் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உறவை எனக்கு ஏற்படாமல் செய் என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுகிறார். இதையேதான் அர்ஜுனனைப் பார்த்து கிருஷ்ண பரமாத்மா ''நீ பண்டிதன் போல் பேசுகிறாய், பாமரன் போல் விசனப்படுகிறாய்'' என்று சொன்னார். இங்கே சிந்தைக்கும், சொல்லுக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது. இரண்டுக்கும் பொருத்தமில்லை. இரண்டையும் பொருந்தும் படிச் செய்வதே யோகத்தின் முதற்கட்டம். அதற்குப் பிறகு செயலையும் அதனோடு பொருத்தும் போது திரிகரணங்களும் ஒன்றுபடுகின்றன. திரிகரணங்களும் ஒன்றுபடுத்துபவர்களுக்கே மௌனம் வாய்க்கும். முக்தி கிட்டும். முக்தி என்றால் விடுதலை. அதாவது பிரபஞ்சக் கூறுகளாகிய உடல் மற்றும் உள்ளத்தினின்று விடுதலை அடைவது. மனம் கூத்தாடும் போது அது சொல்லாக வடிவெடுக்கிறது. மனம் ஒடுங்க ஒடுங்க எண்ணங்கள் குறைகின்றன. அதைத் தொடர்ந்து பேச்சும் குறைந்து விடுகின்றது. பேச்சற்ற நிலையிலேயே ஆனந்தம் இருக்கிறது. தூங்கும் போது யாரும் பேசுவதில்லை. எனவேதான் ஆனந்தமாகத் தூங்கினேன் என்கிறார்கள். ''ஆனந்தம் ப்ரம்மம்'' என்பது வேத வாக்கு. எனவே மௌனமே ஆனந்தம் என்பதுவே மௌனத்தின் வாக்கு. அதாவது மௌனத்தின் குரல்.

No comments:

Post a Comment